அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிக்க தயாராகும் யாழ்ப்பாணம்!!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த போராட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்.பண்டத்தரிப்பு சந்தியின் சுற்றுவட்டத்துக்கு அருகில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இந்த பிரதேசத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களையும், மனிதநேயமுள்ள சமூக செயற்பாட்டாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப்பட வேண்டும், வருடக் கணக்காக முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உயிர்களைக் காக்க வேண்டும்.

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தங்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் அனைத்து சிறைகளுக்கும் விரிவடைந்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி