வெளிநாட்டுப் போர்க்கப்பல்களுக்காக இலங்கையில் அமைக்கப்படும் இறங்குதுறை!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், இலங்கை கடற்படைக் கப்பல்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்கான, தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அலரி மாளிகையில் எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல் என்ற மாநாட்டின் இரண்டாவது நாளான, கடந்த 12ஆம் திகதி, உரையாற்றிய இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரி, றியர் அட்மிரல் பியால் டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை உள்ளிட்ட சிறிலங்காவின் எல்லா துறைமுகங்களிலும், அனைத்துலக கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு வசதி உள்ளது. அதில் எந்த வேறுபாடும் இல்லை.

இலங்கையின் ஏனைய வணிகத் துறைமுகங்களில் உள்ளதைப் போலவே, இந்த அனைத்துலக கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு வசதியை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள், சிறிலங்கா கடற்படை ஒரு தளத்தை அமைக்கிறது.

கடற்படைத் தளம் விரிவுபடுத்தப்படவுள்ளது. அங்கு 3.6 ஏக்கர் நிலம் உள்ளது. கடற்படைத் தளத்தை அமைக்க மேலும், 15 ஏக்கர் நிலம் தேவை. அதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும்.

இந்த தளத்தில் உயர் திறன் கொண்ட ராடர்கள் உள்ளிட்ட கண்காணிப்பு பொறிமுறைகள் அமைக்கப்படும்.

கடற்படைக் கப்பல்கள் மற்றும் வெளிநாட்டுக் கடற்படைக் கப்பல்களை நிறுத்துவதற்கு இன்னொரு இறங்குதுறையை அமைப்பது குறித்தும் சிறிலங்கா கடற்படை பேச்சு நடத்தி வருகிறது,

துறைமுகத்துக்குள் எந்தவொரு நீர்மூழ்கியையும் அனுமதிக்கவில்லை. இதற்கு, இராஜதந்திர வழிகளின் ஊடாகவே அரசாங்கத்திடம் இருந்து அங்கீகாரத்தைப் பெற முடியும்.

தற்போது கூட, பிராந்திய நாடுகளின் வெளிநாட்டுக் கப்பல்கள் மற்றும் பிராந்தியத்துக்கு வெளியே உள்ள நாடுகளின் கடற்படைக் கப்பல்கள், அம்பாந்தோட்டைக்கு பயணம் செய்கின்றன.அதில் எந்த தடங்கல்களும் இல்லை.

தரிப்பிட வசதி உள்ள வரை, எந்தக் கப்பலும் வரலாம். ஆனால், இன்னமும் எந்தவொரு சீன கப்பலும், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி