சிறைச்சாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வந்த நடைபயணம் அநுராதபுரம் சிறைச்சாலையை அடைந்துள்ளதுடன் மாணவர்கள் தற்போது சிறைச்சாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை விடுவிக்க கோரி அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களது உடல்நிலை மிகமோசமான கட்டத்தை அடைந்து வருகின்றது.

இந்த நிலையில் அவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுர சிறைச்சாலை நோக்கி பேரணியை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் நடைபயண பேரணியானது ஐந்தாவது நாளான இன்று அநுராதபுர சிறைச்சாலையை அடைந்துள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலை முன்பாகக் கூடிய மாணவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனுராதபுரம் - சாளியபுரத்தில் இருந்து கரைச்சிபிரதேசசபை தவிசாளர் அ.வேழமாளிகிதன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை,மற்றும் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்களான ப.குமாரசிங்கம், தயாபரன், தமிழ் தேசிய உணர்வாளர்கள் இணைந்து அனுராதபுரம் நகரத்தினூடாக சிறைச்சாலை முன்றலை சென்றடைந்துள்ளனர்.

மாணவர்களின் இப் போராட்டத்தினால் சிறைச்சாலை அதிகாரிகள் சற்று குழப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகமும், அநுராதபுரம் ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

மேலும்,

  • இலங்கையின் எல்லா சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுவித்து அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்

  • தமிழர்களை சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதி விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

  • இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்பு கூறல் சர்வதேச பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெற வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி