அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தமிழ் தலைமைகள் வலியுறுத்த வேண்டும் – முதலமைச்சர்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என்ற அழுத்தத்தினை தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, உண்ணாவிரதத்தினை கைவிடுமாறும் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதுடன், சிலரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளதை தொடர்ந்து, சிவில் அமைப்புக்கள் நேற்று (12) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த சந்திப்பின் போதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதனால், பல கருத்துக்கள் மக்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டு வருவதுடன், நீதியமைச்சர் தலாதா அத்துகோரல அரசியல் கைதிகள் இல்லை என கூறியிருக்கின்றார்.

நீதியமைச்சரின் கருத்து தவறென எடுத்துரைக்கப்பட்டதுடன், விசேட சட்டத்தின் கீழ் நாட்டின் வழமையான சட்டத்திற்குப் புறம்பாக சிலர் அரசியல் காரணங்களுக்காக, குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இவை தவறான நடவடிக்கை என்ற காரணத்தினால், அவர்களுக்கெதிரான அரசியல் நடவடிக்கை என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளாக இருப்பதற்கு மற்றொரு காரணம், வழமையான வன்முறைகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தினை அரசாங்கம் அரசியல் ரீதியாகவே தீர்மானத்திற்கு வருகின்றனர்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டால், பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் போடுவதா என அரசாங்கம் தீர்மானிக்கின்றார்கள்.

அவ்வாறு கொண்டு வரப்பட்டதனால், அரசியல் கைதிகள் என அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆணைகளை கருணா போன்றவர்கள் இட்ட போது, அந்த ஆணைகளை நிறைவேற்றியவர்கள் 18 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் இருக்கின்றார்கள். ஆணையிட்டவர்கள், வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்கள்.

எதிர்வரும் சில காலங்களில் வரவு செலவு திட்டம் கொண்டு வரப்படவுள்ளமையினால், சிவில் அமைப்புக்கள் தமிழ் தலைமைகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

வரவு செலவு திட்டம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, தமிழ் தலைமைகள் கட்சி பேதமின்றி வாக்களிக்காது, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தவறினால், வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேநேரம், சிவில் அமைப்புக்கள் தாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதனால், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்துள்ளதுடன், பாதர் சக்திவேல் தலைமையிலான 5 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (13) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதமிருக்கும் கைதிகளிடம் உண்ணாவிரதத்தை கைவிடு வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாகவும், முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி