மோசடியாளருக்கு இளங்செழியன் வழங்கிய கடுமையான தண்டனை!

திருகோணமலை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் காசோலைகளை மோசடி செய்த குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் இன்று வழங்கியுள்ளார்.

இதில் பண்டாரவளை, சமகி மாவத்தையைச் சேர்ந்த 65 வயதுடைய ஹென்றி ஓல்ட் குமாரநாயக்க என்ற 10 நபருக்கே இந்த தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2003 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கணக்காளராக கடமையாற்றி வந்த ஹென்றி ஓல்ட் குமாரநாயக்க என்பவருக்கு எதிராக ஒரு கோடியே 74 இலட்சத்து ஆயிரத்து 892 ரூபாய் பெறுமதியான 6 காசோலைகளை மோசடி செய்ததாகவும், அதில் ஐந்து காசோலைக்குறிய பணத்தை அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் இட்டு மற்றைய காசோலையை நேரடியாக அவரது பெயரில் மாற்றி மோசடி செய்தமையினால் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இதேவேளை இந்த வழக்கு முடிவடையும் தருவாயில் மூன்று தடவை நீதிமன்றத்திற்கு வராமையினால் அவருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்தது.

இதனை அடுத்து பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜரான போது ஏற்கனவே சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டு குற்றவாளியாக காணப்பட்ட இவருக்கு இன்றைய தினம் தீர்ப்பையும் தண்டனையையும் வழங்கினார்.

"பகிரங்க ஆதனங்கள் மீது புரியப்படுகின்ற தவறுகள் சட்டத்தின்" கீழ் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இச்சட்டத்தின்கீழ் இவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அந்தத் தொகையின் மூன்று மடங்கினை அதாவது 5 கோடியே 22 இலட்சத்து 5 ஆயிரத்து 676 ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது .

அப்பணத்தை செலுத்தாவிட்டால் மேலதிகமாக 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்தார்.

மேலும் இவருக்கு எதிராக 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி