கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்த மனோகணேசன்!!

மரங்கொத்தி பறவை எல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதையை போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிலரை பேசும் துணிச்சலில் என்னையும் பேச எத்தணிக்கின்றார் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னுடன் பகைமை பாராட்டி வருகின்றார்.

ஆயுதப் போராட்டங்களின் ஆரம்பங்களில் பகை முரண்பாட்டையும், நட்பு முரண்பாட்டையும் ஆயுத போராட்டங்களின் தலைவர்கள் சரியாக உணர்ந்து கொள்ள தவறியமையால் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டார்கள்.

அவ்வாறு பல கட்சிகள் இருக்கலாம், அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவை பகை முரண்பாடாக அமைந்து விடக்கூடாது.

வரலாற்றில் இருந்து நாங்கள் தெளிவடைய வேண்டும். வரலாறு தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளவேண்டும். நான்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும், எனக்குதான் எல்லாம் தெரியும் என்ற மனோநிலையில் இருக்க கூடாது.

நான் அனைவருக்கும் நண்பன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் மாதிரிக் கிராமம் ஒன்று கையளிக்கும் நிகழ்வில் சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாஸ என்னுடைய நண்பன். நான் அமைச்சர் சபையில் வடகிழக்கு மக்களுக்கு வீட்டு திட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும் என சண்டையிட்டேன்.

அதனடிப்படையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மாதிரி கிராமங்களை உருவாக்கி வருகின்றார். ஆனால் அவருடைய மாதிரி கிராம திட்டத்திற்கும் எனது வீட்டு திட்டங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான வீட்டு திட்டங்களை நாங்கள் அமைக்கவுள்ளோம். ஒவ்வொன்றும் 12 இலட்சம் பெறுமதியான அரச நன்கொடையில் கட்டப்படவுள்ளன.

மேலும் நான் நல்லிணக்க அமைச்சை பொறுப்பேற்று 2 மாதங்களே ஆகின்றது. ஆகவே இதற்கு முன்னர் இடம்பெற்ற தவறுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல.

மரங்கொத்தி பறவை எல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதைபோல் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னபலம் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரனுடனும் பேசுவது போல் என்னுடன் பேச எத்தணிக்க கூடாது.

நான் மனோகணேசன். நான் சீ.வி.விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ, சுரேஸ் பிரேமச்சந்திரனோ அல்ல.

கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோதே நான் அநியாயங்களுக்கு எதிராக பேசியவன் என்றும் அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி