வடமாகாண சபையின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு போட்டியிடும் மூவர்!

தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஓர் ஆரம்பமாக விளங்கும் வடமாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான மாகாண ஆட்சி நிறைவுக்கு வரும் நிலையில், மீண்டும் வடமாகாண சபையின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு அக்கட்சி வியூகம் வகுத்துச் செயற்படுமா என்பது தமிழர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட வடமாகாண வாக்காளர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.

தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் களமிறக்கப்படுவாரா அல்லது இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் புதிய தலைமைக்கு அமர்த்தப்படுவாரா என்ற கேள்வியும் வலுவடைந்துள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் அவர் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு பின்னர் தனது எதிர்கால அரசியல் பற்றி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் உள்வாங்கிக்கொண்டு அடுத்த மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்பதே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் கருத்தாக உள்ளது.

அதேநேரம், வடமாகாண சபைத் தேர்தலுக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் புதிய ஒருவரை களமிறக்க வேண்டுமென்பதில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களின் கருத்தாக உள்ளதென்று வடமாகாண அரசியல் வட்டாரங்கள் மூலம் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இதனிடையே, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் கதிரையில் அமர்த்த வேண்டுமென்று சிரேஷ்ட தலைவர்கள் சிலர் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் கட்சியின் இணைத்தலைவரான தற்போதைய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை நிறுத்த வேண்டுமென மேலும் சிலர் வலியுறுத்த தொடங்கியிருப்பதாகவும், தமிழரசு கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இந்த இரண்டு தலைவர்களுமே, முதலமைச்சராக வருவதற்கு விருப்பம் கொண்டிருப்பதாக வடமாகாண அரசியல் களத்தில் பேசப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரனா, மாவை சேனாதிராஜாவா? அல்லது சீ.வி.கே.சிவஞானமா? என்ற கேள்வி வாக்காளர் மத்தியில் நிலவுகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சி இது விடயத்தில் என்ன முடிவுகளை இறுதியாக எடுக்கும் என்பது பற்றி இன்னமும் உறுதியாக தெரியவரவில்லை.

ஆயினும், புலம்பெயர் சமூகத்துடன் நெருக்கமானவராக காட்டிக்கொள்வதாக சொல்லப்படும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை, அரவணைத்துச் செல்லாமல் தமிழரசு கட்சி தனித்துப் பயணிக்குமாயின் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் பகைமைக்கு ஆளாக நேரிடுமென்று தலைமைத்துவத்திற்கு நெருக்கமான சிலர் ஆலோசனை வழங்கி வருவதாகவும், வடமாகாண அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனின் வகிபாகம் கூட்டமைப்பு சார்ந்ததாக இருக்காதென்று பல இடங்களில் நேரடியாக தெரிவித்தும் இருக்கிறார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை தொடர்ந்து, விக்கி மீதான எதிர்ப்புகள் தமிழரசு கட்சியில் அதிகரித்து காணப்படுகின்றன.

இலங்கை தமிழரசு கட்சி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இருந்தாலும், சிலர் எதிர்ப்புக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவித்தவண்ணமே உள்ளனர்.

இவ்வாறான நி​லையில், விக்கினேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையின் மூலம் தனது நிலைப்பாட்டி னைத் தெரிவித்து வருகிறார். எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

அந்தக் கலந்துரையாடலின் போது, விக்கியின் அரசியல் நிலைமை தொடர்பான இறுதி உரை இடம்பெறவுள்ளது.

வடமாகாண சபை நிறைவும், விக்கியின் இறுதி உரையின் பின்னரான அரசியல் நிலைமைகளும் வடமாகாண மக்களின் எதிர்ப்பார்ப்பும், அரசியல் பிரச்சினைகளுக்கும் தலைமை தாங்குவது யார் என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துள்ளது.

கூட்டமைப்பில் 3 கட்சிகள் அங்கம் வகித்தாலும், ஏனைய 2 இரண்டு கட்சிகளும், தமது கட்சி சார்பாக யாரையாவது ஒருவரை சிபாரிசு செய்யக்கூடிய நிலைமையும் ஏற்படாதென்பதற்கு உத்தரவாதமில்லாத ஒரு சூழ்நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில், விக்கியின் 24ஆம் திகதிய அறிவிப்பு, கூட்டமைப்பில் தொடர்ந்தும், செயற்படுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துமா? அல்லது, அவரை தமிழரசுக் கட்சி விலக்கி வைப்பதற்கான நிலைமையை ஏற்படுத்துமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

1987ஆம் ஆண்டு இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை ஆட்சி முறைமையின் கீழ், முதலாவது வடகிழக்கு இணைந்த மாகாண சபையாக ஆரம்பித்த தமிழ் மக்களின் மாகாண ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்ததன் பின்னர் 26 வருடங்களிற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்பட்ட விக்கினேஸ்வரன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால், பதவியேற்ற காலத்திலிருந்து வடமாகாண சபை பல்வேறு அரசியல் நெருக்குவாரங்களிற்கு முகம்கொடுத்துள்ளது.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களை உள்ளடக்கிய 34 உள்ளூராட்சி சபைகளைக் கொண்ட மாகாண சபை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அரசியல் இதயமாகவும், அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் களமாகவும் விளங்குகிறது.

ஆகவே, இந்தச் சபையை ஆக்கபூர்வமான அரசியல் அதிகாரத்துடன், வழிநடத்தப் போவது யார் என்பது தமிழ் மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி