அனுராதபுரம் உள்ளிட்ட ஸ்ரீலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு வட மாகாண முதலமைச்சருடன் இணைந்து பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
அரசியல் கைதிகளின் விடயத்தை சிவில் அமைப்புக்கள் கையில் எடுத்துள்ளதால் அரசியல் கைதிகள் தமது உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
தமக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் குறுங்கால புனர்வாழ்விற்கு உட்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
கடந்த மாதம் 14 ஆம் திகதி முதல் அனுராதபுரம் சிறையிலுள்ள 8 அரசியல் கைதிகள் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில் மேலும் இரண்டு அரசியல் கைதிகளும் இணைந்திருந்தனர்.
இந்த கைதிகளுக்கு ஆதரவாக கொழும்பு மெகசீன் மற்றும் கண்டி சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில்நேற்று நடைபெற்ற சந்திப்பில் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் பொது அமைப்புக்கள், விடுதலைசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சட்டத்தரணைிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கைதிகள் தமது உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் போது, அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார் .
அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிடின் வரவு- செலவு திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவதெனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை சட்ட ரீதியாக அணுகாது அரசியல் ரீதியாக அணுகுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்பதே இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரினதும் நிலைப்பாடாக இருந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கூட்டமைப்பு அக்கறை கொள்வதில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாம் முழுமையாக நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.