அம்மாச்சி உணவகத்தின் பெயர் குறித்து அங்கஜன் வெளியிட்ட கருத்து!

வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதும் மற்றும் உருவாக்கப்படவுள்ளதுமான உணவகமான அம்மாச்சி எனும் பெயரிலான உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது தொடர்பில் ஆராய்வதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு மாகாண சபையானது கடந்த ஐந்து வருடங்களில் உருப்படியாகச் செய்த காரியம் அம்மாச்சி எனும் உணவகம் தான் என்று முகநூலில் ஒருவர் வெளிப்படுத்தியதைப் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் உண்மையில் மத்திய அரசின் நிதியில் மத்திய அரசின் திட்டத்திற்கமையவே அந்த உணவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதன் பெயரைத் தான் வடக்கு மாகாண சபை அம்மாச்சி என்று மாற்றி வைத்திருக்கின்றது.

அதாவது நாட்டிலுள்ள எட்டு மாகாணங்களில் சிங்களப் பெயரிலேயே இந்த உணவகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அதனையே வடக்கில் அம்மாச்சி என்று பெயரை மாற்றி வைத்திருக்கின்றனர்.

அதற்காக தமிழ்ப் பிரதேசமான இங்கும் சிங்களப் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆகையினால் தமிழ்ப் பெரையே வைக்க வேண்டும். அதற்காக இங்கு அம்மாச்சி என்று அந்த உணவகங்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்தும் அதே மாதிரியான பெயர்கள் தான் வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

கோண்டாவிலில் இந்த உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பெயரை 25 ஆம் திகதிக்குப் பின்னர் வைக்கலாம். அதே போன்று வடக்கு மாகாணத்தில் இன்னும் பல உணவகங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன.

அவற்றுக்கெல்லாம் அம்மாச்சி என்று தான் வைக்க வேண்டுமென்றில்லை.

அவற்றை பாரம்பரிய உணவகங்கள் என்று போடலாம். அதிலும் பாரம்பரியம் மிக்க உணவகம் என்று போடுவது நல்ல பெயராக இருக்கும் என்றார்.

இதே வேளை மத்திய அரசின் திட்டத்திற்கமைய மத்திய அரசின் நிதியில் உருவாக்கப்பட்ட திட்டத்தின் சிங்களப் பெயரைப் மாற்றியே அம்மாச்சி என்று வடக்கில் பெயர்பலகை மட்டுமே மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இத் திட்டம் மாகாண சபையின் திட்டமல்ல அது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் என்பதையும் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி