இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் ,சுனாமி குறித்து குழப்பத்தில் விஞ்ஞானிகள்!!

அண்மையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்தும் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அது குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 28ம் திகதி ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் சுனாமி தாக்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கருவிகளிலும் அது குறித்த தகவல்கள் பதிவாகவில்லை. இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னர் திடீரென சுனாமி தாக்கியது.

இதனால் பலர் உயிரிழந்தனர். சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த விடயம் குறித்து ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் தேசிய மையத்தின் இயக்குநர் கருத்து தெரிவிக்கையில்,

“நிலநடுக்கம் ஏற்பட்டதுமே கருவிகள் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே இந்தோனேசியா உள்ள சர்வதேச தொடர்புகளுக்கு தகவல் தெரிவித்தோம்.

ஆனால் நாம் கடலில் பொருத்தி உள்ள மிதவைகள், கண்காணிப்பு கருவிகளில் சுனாமி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 3 மணி நேரம் தொடர்ந்தும் கண்காணித்தோம்.

அப்போதும் அறிகுறி தெரியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அறிகுறி தெரியாததால் மீளப் பெறப்பட்டது” என கூறியுள்ளார்.

இது குறித்து கடல் ஆய்வியல் மையத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

“சுனாமியை கண்டுபிடிக்கும் கருவியில் எந்தவித அறிகுறியும் பதிவாகவில்லை. இது ஒரு ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கிறது. 2 காரணங்களால் இது கருவியில் பதிவாகாமல் இருந்து இருக்கலாம்.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் மூலம் சுனாமி கீழ் இருந்து உருவாகி இருக்கலாம். அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதும் சிறிய அளவில் சுனாமி உருவாகி பூகோள ரீதியாக அது பெரிதாக மாறி இருக்கலாம்.

எனவே தான் முன்கூட்டியே கருவிகளில் அளவீடு காட்டவில்லை. இது ஒரு அதிசயமான வி‌ஷயமாகத்தான் தெரிகிறது” என அவர் மேலும் கூறியுள்ளார்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி