இன்றைய இளைய தலைமுறைக்கு அறிவுறுத்தும் வடக்கு முதல்வர்!!

இன்றைய குடும்ப அமைப்புக்களின் கீழ் முதியவர்களைப் பராமரிப்பதை இளையோர்கள் ஒரு சுமையாகக் கருதுகின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லவேண்டிய பொருளாதாரக் கட்டாயம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைத்தடி அரச முதியோர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கூட்டு குடும்பமுறைமை நடைமுறையில் இருந்த வேளையில் முதியோர் பராமரிப்பு இலகுவாக்கப்பட்டிருந்தது. இன்று தனித்தனியாக குடும்பங்கள் பிரிந்த நிலையில் முதியோர்களைப் பராமரிக்க இளைஞர்கள், யுவதிகள் பின்னிற்கின்றார்கள்.

எனினும் அண்மையில் இந்த கைதடி முதியோர் இல்லத்திற்கு வயதான தாய் தந்தையர்கள் இருவரையும் இல்லத்தில் சேர்ப்பதற்காக அழைத்து வந்த பிள்ளைகள் இந்த இல்லத்தின் அத்தியட்சகர் கிருபாகரன் அவர்களின் அறிவுரையின் கீழ் தமது தாய் தந்தையாரை இல்லத்தில் சேர்க்காமல் மீளத் தம்முடனேயே வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள் என்பதனைக் கேட்டு மகிழ்வுற்றேன்.

இளமையாக இருந்த காலத்தில் தமது வீட்டிற்கு தேவையான ஒவ்வொரு விடயங்களையும் பிள்ளைகளின் அனைத்துத் தேவைகளையும் ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து நிறைவேற்றிய பெற்றோர்கள் தமது வயது முதிர்ந்த காலத்தில் தம்மைப் பராமரிக்க நாதியற்ற நிலையில் முடங்கி கிடப்பது வருத்தத்திற்குரியது.

முதியவர்களும் குழந்தைகளைப் போன்று நெகிழ் மனம் படைத்தவர்களே. அவர்களின் உடல் உழைத்து களைத்தது என்பதால் சற்று வலிமையான கட்டமைப்புக்களுடன் காணப்படுகின்ற போதும் மனதை பொறுத்த வரையில் குழந்தைகளும் முதியவர்களும் ஒரே மனோநிலை கொண்டவர்கள்.

நண்பர்கள் பகைவர்கள் என்ற வேறுபாடின்றி அன்பாகப் பழகும் மனதைக் கொண்டவர்கள் அவர்கள். தமக்கு இழைக்கப்படும் துன்பங்களையும் இலகுவில் மறந்துவிடுவார்கள் அவர்கள்.

அதனால்த் தானோ என்னவோ ஒக்டோபர் 01ம் திகதியை குழந்தைகள் முதியவர்கள் என இருபாலார்க்கும் பொதுவான ஒரு தினமாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள்.

கைதடி முதியோர் இல்லத்தை பொறுத்த வரையில் இங்கு வாழும் முதியவர்கள் 1ம் திகதியில் இருந்து இன்று வரை மிகவும் மகிழ்ச்சியாக பல்வேறு கலை நிகழ்வுகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள், வண்ண வண்ணக் கொடிகள் என பல்வேறு வினோதங்களுடன் மனதிற்கு இதமான சிறந்த உரைகள், பாட்டுக் கச்சேரிகள் என்பனவற்றைக் கேட்டு மகிழ்ந்து களிப்புற்றிருப்பது மகிழ்விற்குரியது.

இந்த இல்லத்தில் முதியோர்கள் புதிதாக சேருகின்ற போது சற்று மனக்கிலேசத்துடன் இங்கு வருகைதருகின்ற போதும் பழக்கப்பட்ட பின்னர் பிள்ளைகள் வந்து அவர்களை அழைக்கின்ற போது அவர்களுடன் செல்லாமல் இருந்த பல சந்தர்ப்பங்கள் பற்றியும் நான் அறிந்திருக்கின்றேன்.

இங்கு கடமையிலிருக்கும் அனைத்துத் தர நிலைகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த முதியோர்களை மிக அன்புடன் பராமரிக்கின்றார்கள் என்ற உண்மையை உணர்த்துவதாக இந்த செயற்பாட்டைக் கொள்ள முடியும்.

வடபகுதியைப் பொறுத்த வரையில் இங்கு முதியோர்களைப் பராமரிக்கக்கூடிய அரச முதியோர் இல்லமாக இந்த ஒரு இல்லம் மட்டுமே காணப்படுகின்ற போதும் இதற்கு மேலதிகமாக பல்வேறு பிரத்தியேகத் தனியார் முதியோர் இல்லங்களும் மற்றும் முதியோருக்கான ஒன்றுகூடல் மையங்களும் உருவாக்கப்பட்டிருப்பது முதியோர்கள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்திலே உருவாகியிருக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.

முதுமை ஒரு வரப்பிரசாதம். வாழ்க்கையில் ஓடி ஆடி களைத்துப்போன பின் ஓய்வு பெற்று வாழும் நிலையே முதுமை நிலை. தமது இளமை நிலைகளில் தாம் செய்த நன்மைகளையும் தீயனவற்றையும் நினைத்து இரைபோடும் காலமே முதுமை.

எல்லோரிடமும் அன்பு பாராட்டும் ஒரு நிலையே முதுமைப் பருவம். முதியவர்களின் ஆசியைப் பெறுவது இளையோரை நல்ல நிலையில் நின்று வாழ்க்கை நடத்த உதவி புரியும்.

இன்றைய இந்த இனிய முதியோர் தின நிகழ்வுகளில் உங்கள் அனைவரையும் வாழ்த்திக் கௌரவிப்பதுடன், நானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மனநிறைவுடன் எனது உரையை நிறைவு செய்கின்றேன்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி