கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை குறித்து தீவிர கவனம் செலுத்தி வரும் ஜனாதிபதி!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை சம்பந்தமாக தான் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

பிற்பகல் 3 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும், பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் கூட்டமைப்பு எம்.பிக்கள் பேச்சு நடத்த திட்டமிட்டிருந்துள்ளனர்.

எனினும், 5 மணிக்கு நிறைவடைய இருந்த இந்த கூட்டமானது 5.30 மணிவரை நீடித்ததாலும், மாலை 6 மணிக்கு ஜனாதிபதி தவிர்க்க முடியாத முக்கிய கூட்டமொன்றில் பங்கேற்க இருந்ததாலும், அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் குறித்து கூட்டமைப்பு எம்.பிக்களுடன் நீண்டநேரம் பேச்சு நடத்த முடியாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஓரிரு நிமிடங்கள் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்கள் குழுவுடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சு நடத்திய ஜனாதிபதி, அரசியல் கைதிகள் விடயம் குறித்து கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேச்சுக்கள் நடத்துவார் என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், பேச்சுக்கான திகதி ஓரிரு தினங்களில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி