பிரித்தானியாவில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அனைவரும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சென்றிருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 28, 34, 50 மற்றும் 54 வயதான ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், 2000ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் பிரிவு 11 மற்றும் 13இன் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.