தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும்!

உரிய விசாரணைகளும், வழக்குத் தாக்கல்களும் இல்லாமல் சிறைகளில் நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"யுத்த காலத்திலும் சிறைகளில் வகை தொகையில்லாமல் அடைக்கப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதிலும், அவர்களுக்காக இலவசமாக நீதிமன்றங்களில் வழக்காடியும் எனக்கு உதவியாகச் சேவை செய்த மனித உரிமைகள் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதத்துடன் ஆரம்பித்த எமது நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பலரையும், பல நூறு அப்பாவி தமிழ் இளைஞர்கள், யுவதிகளையும் வழக்காடி விடுதலை செய்து, கொழும்பு பூங்கா வீதியில் அமைந்திருந்த எமது அலுவலகத்தில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.

எமது அந்தச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக கடந்த ஆட்சிக்காலத்திலும், சுமார் 12 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவதற்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆட்சியாளர்களிடம் எனது கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து அதைச் சாதித்திருந்தேன்.

அதுபோல், சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தமிழ் கைதிகளைப் பார்வையிட்டு, ஆறுதல் கூறவும், அவர்களின் விடுதலைக்காக முயற்சிக்கவும் அவர்களை பார்வையிட களுத்துறை சிறைக்குச் சென்றிருந்த என்னைத் தாக்கிய கைதிகளுக்கு மன்னிப்புக் கொடுக்கவேண்டும் என்று கூறியதுடன், தற்கொலையாளியை ஏவிவிட்டு என்னைக் கொலை செய்யும் திட்டத்துக்குத் துணை போன குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று நீதிமன்றத்திடமே கோரிக்கை விடுத்தும் இருந்தேன்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான வரலாற்றில் அரசியல் கைதியாக நானும் இலங்கையில் பனாகொட இராணுவச் சிறையிலும், வெலிக்கடைச் சிறையிலும், மட்டக்களப்புச் சிறையிலும் அடைக்கப்பட்ட அனுபவத்தைக் கொண்டிருப்பதால் தற்போது சிறைகளில் இருப்போரின் உணர்வுகளையும், தவிப்புகளையும் நன்கு அறிவேன்.

அரசியல் கைதியாக இருந்த என் போன்ற பல போராளிகளும், போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்தவர்களும் 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்துடன் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் என்பதையும் நினைவுப்படுத்திக் கொள்கின்றேன்.

அந்த வகையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட அந்த காலத்திலேயே தமிழ் அரசியல் கைதிகளாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குரல்கொடுத்து வருகின்றேன்.

துரதிஷ்டவசமாக நான் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் இருக்காத காரணத்தினால், சிறைகளில் அவலப்படும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகத் தொடர்ச்சியாகச் செயற்பட முடியாமல் போய்விட்டது.

இருந்தபோதும், ஆட்சி மாற்றத்தின் பின்னரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கையை விடுத்து வருகின்றேன்.

அந்த அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஆட்சியமைத்த இந்த ஆட்சியாளர்கள், தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறியிருக்கின்றார்கள்.

இந்த நிலையில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து ஏமாற்றமடைந்து தமிழ் மக்களுக்கு ஒரு நல்லிணக்க ஆறுதலை வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி