காணிகளை விடுவிக்க பாதுகாப்புத் தரப்பினருக்கு பணத்தை வழங்க தயாராக உள்ள அரச தலைவர்!

தனியார் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் மாற்றுக் காணிகளை அடையாளப்படுத்தி அதற்கான திட்டங்களை முன்வைத்தால், அதற்குத் தேவையான பணத்தை விடுவிக்கத் தயாராக இருப்பதாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால,

கடந்த வாரம் இடம்பெற்ற வடக்கு - கிழக்குச் செயலணிக் கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் தனியார் காணிகளை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்று கேட்டுள்ளார்.

முப்படையினரும் தம்வசம் எவ்வளவு காணிகள் இருந்தன? எவ்வளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்களை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினர்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எப்படியாயினும் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

"காணிகள் விடுவிப்பில் இராணுவத்தினர் சில சிக்கல்கள் இருப்பதாக, மாவட்டச் செயலகத்தில் நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்கள். தமக்கு மாற்றுக் காணி தேவை என்பதையும், அந்தக் காணிக்கு முகாமை இடமாற்றுவதற்குப் பணம் தேவை என்றும் குறிப்பிட்டார்கள்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புத் தரப்பினர் மாற்றுக் காணிகளை அடையாளப்படுத்தி தமது திட்டங்களைச் சமர்ப்பிக்கட்டும்; பணம் வழங்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், அடுத்த மாதம் 8ஆம் திகதி வடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, காணி விடயங்கள் தொடர்பில் தனியான கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி