பௌத்த மதம் தமிழர்களுக்கும் சொந்தமாகும் - மனோகணேசன்

சிங்கள குடியேற்றங்கள் மற்றும் மத்திய அரச திணைக்களங்களின் ஆக்கிரமிப்புக்கள் குறித்து பேசுவதுடன் சேர்த்து மக்கள் தங்கள் உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்து போராடவும் வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டுக்கு நேற்று வருகைதந்த அமைச்சர் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டிருந்தார்.

இதில் கலந்து கொண்டு, நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் குடியேற்றங்கள் மற்றும் வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் அத்துமீறல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அண்மையில் ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து நானும் இந்த விடயம் தொடர்பாக பேசியிருந்தேன்.

இதனடிப்படையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குறித்த திணைக்களங்களின் அதிகாரிகளை அழைத்து கூட்டங்களை நடாத்துமாறு ஜனாதிபதி வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

இந்த கூட்டங்கள் நடாத்தப்படும்போது அது தொடர்பான விடயங்கள் பூரணமாக வெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன. மேலும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரை சந்தித்து பேசியபோது வடக்கில் பல இடங்களில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாக அவர் எனக்கு கூறினார்.

பௌத்த மதம் சிங்கள மக்களுக்குரியதல்ல. தமிழ் பௌத்தர்களும் வாழ்ந்தார்கள். ஆகவே அந்த இடங்கள் தமிழ் மக்களுக்கு சொந்தமானவை என்று நான் அப்போது கூறினேன்.

மேலும் முல்லைத்தீவில் ஆய்வு நடாத்த சென்றபோது பௌத்த பிக்கு ஒருவரை அழைத்து சென்றமை பாரிய தவறு என கூறியிருந்தேன்.

அதனை அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். இனிமேல் அவ்வாறான தலையீடுகள் இருக்காது என கூறியிருக்கின்றார்.

ஆகவே நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், நாங்கள் இந்த விடயங்களை பேசுவதற்கும் அப்பால் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்காக கிளர்ந்தெழுந்து போராடுவது இன்னும் பயனை தரும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி