கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி!

ஈரானிடமிருந்து பெற்றோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதியளித்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ நேற்று(திங்கட்கிழமை) இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதுடன், அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்தநிலையில் ஈரானிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தொடரும் என இந்தியா அண்மையில் தெரிவித்தது. இதுகுறித்து அமெரிக்காவிடம் இந்தியா சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த நிபந்தனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இறுதி முடிவைத்தவிர வேறு எந்த நாட்டின் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட முடியாது என்பது இந்தியா கடைபிடித்துவரும் வெளியுறவுத்துறை கொள்கையாகவுள்ளது.

முன்னர் இருந்த அளவை விட ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் அளவை இந்தியா ஓரளவுக்கு குறைத்து கொண்டுள்ளது.

எனினும் உள்நாட்டு நுகர்வுத் தேவையை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என இந்திய மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். நேற்று முதல் இந்த தடைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஈரானிடமிருந்து பெற்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சீனா, இந்தியா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகிய 8 நாடுகளுக்கு இந்த தற்காலிக விலக்கு அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி