மஹிந்த பிரதமரானதன் பிண்ணனியில் பாரிய அரசியல் சூழ்ச்சி!!

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் சூழ்ச்சியை தோற்கடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்து யோசனைகளுக்கும் ஆதரவாக வாக்களிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜே.வி.பி யின் தலைவர், மைத்திரி – மஹிந்த தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றில் தாக்கல்செய்யத் திட்டமிட்டுள்ள கணக்கறிக்கையை தோற்கடிப்பதற்காக வாக்களிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் யார் பிரதமர் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தீர்மானிக்கும் சக்தியாக ஜே.வி.பி யினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மாறியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஜே.வி.யின் நிலைப்பாடு பெரும் கேள்விக்குறியாகி இருந்தது.

இந்த நிலையில் ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி எடுக்கவுள்ள தீர்மானத்தை அறிவித்திருக்கின்றார்.

அதுவும் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் மாபெரும் கூட்டமொன்றை நடத்தி நாட்டு மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்காக மஹிந்த – மைத்திரி தலைமையிலான கூட்டணி நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையிலேயே ஜே.வி.பி யின் தலைவர் இந்த அதிரடி அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.

கடந்த ஒக்டோபர் 26-ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுகள் பாரிய அரசியல் சூழ்ச்சியாகும். அந்த அரசியல் சூழ்ச்சியை வெற்றிபெறச் செய்யவே நாடாளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு ஆட்சியை கைப்பற்றும் முயற்சியும் நாடாளுமன்ற அமர்வு முடிந்தவுடன் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இந்த சூழ்ச்சியை தோற்கடிக்க வேண்டும்.

5ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச கூறினார். பின்னர் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுமென ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டது. 7ஆம் திகதி சபையில் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர் மாநாடு நடத்தப்பட்டதில் 7ஆம் திகதி சபை கூடுமென ஜனாதிபதி தனக்கு கூறியதாக சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்த நிலையில் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுமென நேற்று ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

சபையில் பெரும்பான்மையை திரட்டுவதற்காக கறுப்புப் பணமாற்றம், கொடுக்கல் வாங்கலை செய்துகொள்வதற்காகவே இந்த கால தாமதம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

கறுப்பு பணத்தின் ஊடாக அரசாங்கத்தை கைப்பற்றலாம் என்ற சமிக்ஞையை மைத்திரிபாலவும் மஹிந்தவும் நாட்டிற்கு தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த அரசியல் சூழ்ச்சியை தோற்கடிக்கின்ற எந்த சந்தர்ப்பத்தையும் நாங்கள் பயன்படுத்த ஆயத்தமாக இருக்கின்றோம்.

நாடாளுமன்றம் கூடும்போது அரியாசன உரையை ஜனாதிபதி நடத்தினால் அதனையும் தோற்கடிக்க ஆயத்தமாகுவோம். அதற்கான வாக்கெடுப்பை நடத்தக் கோருவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

அதேபோல இந்த நியமனங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று கூறும் யோசனை சபையில் முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம்.

எதிர்வரும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவும் ஆயத்தமாகியிருக்கின்றோம். இதனை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். நாடாளுமன்றில், வீதியில் நாடெங்கிலும் நீதியைப் பெறுவதற்கான போராட்டகளை நடத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி