சட்டங்களிற்கு புறம்பாக அரசியல்வாதிகள்! அநாகரிகமாக இருக்கும் பாராளுமன்றம்!!

தொலைபேசியில் யார் தொடர்புகொண்டாலும், பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் முதல் கேள்வி! அந்தளவிற்கு அங்கு நடக்கும் விடயங்களில் அக்கறைகொண்டிருக்கிறார்கள் மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாராளுமன்றத்தில் அக்கறையிருக்கிறதோ இல்லையோ, மக்களுக்கு இருக்கிறது. அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள்கூடப் பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

தற்போது பாராளுமன்றத்தில் நடந்து முடிந்திருக்கும் குழப்பங்கள் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், இந்தளவிற்கு அநாகரிகமாக இருக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அது அரசியலமைப்பை மதிப்பதென்றாலும் சரி, நிலையியற் கட்டளையை மிதிப்பதென்றாலும் சரி, இலங்கை அரசியல்வாதிகளுக்கு நிகர் அவர்கள்தான் என்கிறார்கள் மக்கள்.

கடந்த ஒக்ேடாபரில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தொடர்பில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம்; இருந்திருக்கலாம். ஆனால், கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நடந்த அமளிகளுக்குப் பிறகு, எந்தவித பாகுபாடும் இன்றி மக்கள் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் மீதும் வெறுப்புகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் சட்டங்கள் மீறப்பட்டதா, பின்பற்றப்படுகிறதா? என்பதையெல்லாம் பொதுமக்கள் அறிய வாய்ப்பில்லை. அதனை அறிந்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் நடத்தை மீதும் செயற்பாடுகள் மீதும்தான் மக்களுக்குக் கரிசனை. ஏனெனில், தாம் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்து அனுப்பியிருக்கும் பிரதிநிதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. தமது பிரதிநிதி எதிர்பார்த்ததை நிறைவேற்றுகிறாரா, இல்லையா? என்பதைவிட அவர்கள் எப்படி செயற்பட வேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால், இந்த வாரத்தில் நடந்த சம்பவங்களால் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் மனம் நொந்தவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பது அவர்களின் கருத்துகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில், குத்திக்ெகாண்டும் அடிபட்டும் செத்துத் தொலையட்டும் என்றுகூடச் சிலர் கூறுகிறார்கள்.

அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட ஒரு வெள்ளப்பெருக்கின்போது தியவன்னா ஓயா பெருக்ெகடுத்து ஓடியது. அதுபற்றி ஒரு நாளேடு பென்னம்பெரிய புகைப்படத்துடன் தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிகையை எடுத்து வைத்துக்ெகாண்ட ஓர் உணவகத்தின் உரிமையாளரும் ஊழியர்களும், 225பேரும் சபையில் இருக்கும்போது பாராளுமன்றம் நீரில் மூழ்க வேண்டும் என்று ஒருவருக்ெகாருவர் பேசிக்ெகாள்கிறார்கள். அப்படியென்றால், அரசியல்வாதிகள் மீது அவர்களுக்கு எந்தளவு வெறுப்பு இருக்கிறது என்பதை விபரிக்கத் தேவையில்லை.

உலகில் மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளில் இலங்கை முதன்மையானது என்று முன்பு எந்தளவு பெருமைபட்டுக்ெகாண்டோமோ, அந்தளவிற்குத் தற்போது சிறுமைகொள்ளச் செய்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். பாராளுமன்றக் குழப்பத்தையும் களேபரத்தையும் விபரிக்கும் பத்திரிகைகள் பாராளுமன்றத்தில் ஜனநாயகம் கரைபுரண்டோடியதாகவே குத்திக்காட்டுகின்றன. ஜனநாயகத்தின் உச்ச நிலையால்தான் கட்டிப்புரண்டு சண்டை போடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

பாராளுமன்றத்தில் களேபரம் ஏற்பட்டது இது முதன்முறையன்று.

அண்மையில் ஓர் எதிர்ப்பு நடவடிக்ைகயின்போது உறுப்பினர்கள் இரவு முழுவதும் சபையில் இருந்துவிட்டு விடியற்பொழுதில் திரும்பி வந்திருக்கிறார்கள். அதற்கு முன்பு குறிப்பிடத்தக்க ஒரு சம்பவமென்றால், 1991 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார செங்கோலைத் தூக்கிச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட களேபரத்தைச் சொல்லலாம். அப்போது உறுப்பினர் காமினி லொக்குகே, வாசுதேவவைக் கத்தியால் குத்த முனைந்தார் என்று சொல்லப்பட்டது. அப்போதும் எப்படி சபைக்குக் கத்தியைக் கொண்டு சென்றார் என்ற கேள்வி எழுந்தது.

அதற்குப் பின்னர், தற்போது நடந்த சம்பவத்தின்போதும் கத்தி கொண்டுவரப்பட்டுள்ளது. இதென்றால், சாப்பாட்டு அறையிலுள்ள பட்டர் கத்தி. அது அறுக்கப்பயன்படும் என்றாலும், குத்தியும் காயப்படுத்தலாம். அதனைவிட மிளகாய்த்தூள் இரண்டாம்பட்சமில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரில் சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள், கணக்காளர்கள் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

அதேநேரம், க.பொ.த சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமையைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாராளுமன்றத்தில் எத்தனைபேர் கல்வி கற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. யார் படித்தவர், படிக்காதவர் என்பதை அறிவது ஊடகங்களுக்குத் தேவையில்லாத வேலை, என்று சொல்லப்பட்டாலும், இன்று அந்தப் படிக்காதவர்கள்தான் பாராளுமன்றத்தைக் குழப்புகிறார்கள் என்ற ஓர் இயல்பான பாமரத்தனமாக குற்றச்சாட்டைப் படித்தவர்களும் முன்வைக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் அரசியல் அறிவில்லாதவர்கள், கண்டவர்கள் நின்றவர்கள் எல்லாரும் தெரிவிக்கும் கருத்துகளை மாத்திரம் பார்த்து இரத்தம் கொதிக்கும் அரசியல்வாதிகள், சமூக வலைத்தளங்களுக்கு வெளியில் நிலவும் கருத்துகளையும் கவனத்திற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள எவருக்கும் தற்போது மரியாதை இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி எழுதுவதால், அரசியல் அன்பர்கள் குறையாக நினைக்கக்கூடாது. இந்தக் காலகட்டத்தில் இதனை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அடுத்தடுத்து வரும் பாராளுமன்ற அமர்வுகளாவது முறையாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

பொதுவாக இவ்வாறான நிலைமையினால்தான் நன்கு கல்வி கற்றவர்கள் அரசியலை ஒதுக்குகிறார்கள். அதை ஒரு சாக்கடை என்கிறார்கள். உண்மையில் அரசியல் சாக்கடையல்ல; அதில் ஈடுபட்டுள்ளவர்கள்தான் சாக்கடை என்பது மற்றைய சாராரின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாடு உண்மைக்கு மாறானது என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுடையது.

அரசியலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் நாட்டுக்காகவோ மக்களுக்காகவோ வருவதில்லை. அவர்கள் தம் மக்களுக்காகவும் குடும்பத்திற்காவும் உழைப்பதற்காகவே வருகிறார்கள் என்ற தப்பபிப்பிராயத்தைப் போக்குவதற்கு ஏற்ற வகையில், மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும் என்பது வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிவிட்டார் என்றோ அல்லது சபாநாயகர் நிலையியற்கட்டளையை மீறிவிட்டார் என்றோ வைத்துக்ெகாண்டாலும் அதனை எதிர்கொள்வதற்குக் குழப்பம் ஏற்படுத்துவதைவிட வேறு மார்க்கங்கள் இலங்கை அரசியலமைப்பில் இல்லையா? முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்., தற்போதைய அரசியலமைப்பை அறிமுகம் செய்தபோது, ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்றுவதற்கு மாத்திரம் இயலாது. மற்றும்படி வேறு அத்தனையையும் நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிட்டார். அப்படியென்றால், ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளுக்கு அந்த அரசியலமைப்பில் வழியில்லையா? என்ற கேள்வியைக் கேட்டு மூக்கின்மேல் விரல் வைக்கிறார்கள் பொதுமக்கள்.

உண்மையில் தற்போதைய சட்டச்சிக்கல் என்னவென்பது மக்களுக்குத் தெரியாது. அரசியலமைப்பின் 70ஆவது சரத்தைப்பற்றியும் 33(2)சீ யைப் பற்றியும் நீதிமன்றத்திற்கும் சட்டவல்லுநர்களுக்கும் ஐயம் நிலவும்போது ஸ்ரீமான் பொதுசனத்திற்குப் புரியும் என்று எதிர்பார்க்க முடியுமா? பாராளுமன்றத்தில் அடிபடுவதற்கு இதனைக் காரணமாகக் கூற முடியாது. இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி தேர்தல்தான் என்பதை இரு சாராரும் ஏற்றுக்ெகாண்டுள்ளார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் எதனையும் செய்யாமல் விட்டுவிட்டுத் தற்போது அரசியலமைப்பு மீது பழியைப் போட்டுத் தப்பித்துக்ெகாள்வதற்கு எந்தத் தரப்புக்கும் முடியாது. ஓர் அரசாங்கத்தை வழிநடத்திச் செயற்படுத்தச் செய்ய வேண்டிய தலையாய பொறுப்பு எதிர்க்கட்சியினுடையது.

உலக நாடுகளைப் பொறுத்தவரை, அவை ஓர் அரசு பற்றிக் கவனம் செலுத்துமேயொழிய, அரசாங்கத்தைப் பற்றியல்ல. இதனைப் பிரிட்டிஷ் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார்.

எனவே, அரசியல் கட்சிகள் ஒன்றன் மீதொன்று குற்றச்சாட்டுகளைச் சுமத்தித் தங்கள் பக்க நியாயத்தை நிரூபிக்க முயற்சித்தபோதிலும், சர்வதேச சமூகம் அதுபற்றிக் கரிசனை கொள்ளப்போவதில்லை. அவர்களுக்கு இலங்கை அரசு என்ன செய்கிறது என்பதில்தான் அக்கறையாக இருக்கும். ஆகவே, கட்சி அரசியல் என்பது ஒருபுறமிருந்தாலும், நாடு என்ற ரீதியில், அரசியலில் சம்பந்தப்பட்டுள்ள சகல தரப்பினரும் சிந்தித்துச் செயற்பட வேண்டிய முக்கியமானதொரு தருணமாகவே இந்தக் காலகட்டத்தைக் கருதவேண்டியிருக்கிறது.

பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் பரஸ்பரம் சேறு பூசிக்ெகாள்வதாக நினைத்தாலும், அது சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்படுத்தப்படும் இழுக்கு என்பதை மறந்துவிடக் கூடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இலங்கை அரசாங்கத்தின் மீதான நன்மதிப்பையும் மரியாதையையும் இலங்கையின் உச்ச நீதிமன்றம் காப்பாற்றிக்கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்று ஒழுகுவதற்கு ஒரு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியே நடவடிக்ைக எடுத்திருக்கும் நிலையில், அதனைச் சீர்குலைப்பதற்குப் பாராளுமன்ற அரசியல் செயற்பாடுகள் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கக்கூடாது.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி