சிறப்புரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேற்றப்பட வேண்டும்!

ரணில் விக்ரமசிங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்‌ஷவோ தற்பொழுது பிரதமர்கள் இல்லையென்பதால் அவர்களுக்கான சிறப்புரிமைகள் யாவும் மீளப்பெறப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தற்பொழுது நாட்டில் அமைச்சரவையோ அல்லது பிரதமர் பதவியோ ஏற்புடையது அல்ல. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேறுவதுடன், பிரதமர் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்படும் ஹெலிகொப்டர் பிரயாண வசதிகள் உள்ளிட்ட சிறப்புரிமைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜே.வி.பியின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் பிரதமர் ஒருவரோ அமைச்சரவையோ இல்லை. எனவே ரணில் விக்ரமசிங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்‌ஷவோ அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது. அத்துடன் நிதி நிர்வாகம் குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருப்பதால், பிரதமரின் செயலாளருக்கான செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் பிரேரணையை சமர்ப்பித்துள்ளோம்.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் நிதி தொடர்பான பிரேரணையைக் கொண்டுவர முடியும். தம்மிடம் பெரும்பான்மை இருப்பதாக அவர்கள் கருதினால் இந்தப் பிரேரணையை தோற்கடிக்க முடியும். தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலை பல குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி அமைச்சுக்களில் பணியாற்றுபவர்களுக்கான சம்பளங்களை வழங்க முடியும். எனினும், ஜனவரி மாதத்துக்கான சம்பளத்தை வழங்குவது தொடர்பில் சந்தேகம் உள்ளது என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நிதி நிர்வாகம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக பாராளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளை மூடிமறைக்கும் நோக்கிலேயே அரசாங்கத்தில் இருப்பதற்கு சிலர் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அநுரகுமார திசாநாயக்க, இதனாலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா இடம்மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் மிளகாய் தூள் கலக்கப்பட்ட நீரைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையே. தேவையாயின் இது குறித்து இரசாயணப் பகுப்பாய்வை நடத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி