Breaking

Thursday, September 12, 2019

யாழ்ப்பாணத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! ஐந்து வருடங்களிற்கு பின் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவின் வடபகுதி கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இந்தியர்கள் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 40 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்தது.

2014ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் வடக்கு கடற்பரப்பில் படகில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் போது, அவர்களிடமிருந்து 70.1 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக நஞ்சு அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றத்தை ஒப்புக் கொண்ட குறித்த மூவருக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 40 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்தது.

தமிழகம் - இராமேஸ்வரத்தின் காலி மாரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிஜாம் குமரேஸ், இராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் தேசிங்கராஜன் ஆகிய மூவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.