Breaking

Monday, December 16, 2019

பேனாவிற்காக பறிபோன சிறுமியின் உயிர்!



ராஜஸ்தானில் பேனாவை யார் வைத்துக்கொள்வது என்பதில் ஏற்பட்ட தகராறில் 10 வயது சிறுமி, தமது வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம், சக்சு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பிற்கான தேர்வு நடந்துள்ளது. தேர்வின் முடிவில் ஒரு சிறுமியின் பேனாவை அந்த சிறுமியின் தோழி,  எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிந்த பிறகு தனது பேனாவை வாங்குவதற்காக தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, இரண்டு சிறுமிகளுக்கும் இடையே பேனாவை யார் வைத்து கொள்வது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து பேனாவை எடுத்துச்சென்ற சிறுமி, மற்றொரு சிறுமியை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். கொலை செய்த சிறுமியின் பெற்றோர், கொலையை மறைக்க, உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வேறு இடத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

சிறுமி சடலமாக கிடந்தது குறித்து அறிந்த போலீசார், தடயங்களின் அடிப்படையில் கொலை செய்த சிறுமி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர். பேனாவிற்காக சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.