யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கடற்படை தாதி மாணவர் ஒருவர் தமிழ் தாதியர் மீது வெள்ளிக்கிழமை கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கார்டியன் எனும் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளை நினைவுகூறும் புகைப்படத்தை அனுப்பியதற்காக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தாதிய பயிற்சிக் கல்லூரியில் கடற்படையைச் சேர்ந்த மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவ்வாறு பயிற்சி பெறும் கடற்படை மாணவர் ஒருவர், லண்டனில் தமிழர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சமிக்ஞை காட்டிய இராணுவ அதிகாரியின் படத்தை கடந்த மே 19ம் திகதி அனுப்பியுள்ளார் என்றும் இது தமிழ் மாணவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நேற்றைய தினம் பிறந்த நாள் கேக் வெட்டும் படம் ஒன்றை தமிழ் மாணவர் ஒருவர் குறித்த கடற்படை மாணவனின் கைபேசி இலக்கத்துக்கு அனுப்பினார் என்றும் இதனால், ஆத்திரமடைந்த கடற்படை மாணவன் படம் அனுப்பிய தமிழ் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப் பட்டது.
இந்த விடயம் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது, நாட்டில் விரோதமான சூழ்நிலை நிலவுகின்ற போதிலும் ஏன் படத்தை அனுப்பியதாக பாதிக்கப்பட்ட நபரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
0 Comments