வரவு செலவு திட்டம் கிழவியை மணப்பெண்ணாக்கும் கதை போன்றது:இம்ரான் மகரூப்

 அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு எவ்வாறு அமையவுள்ளது என்பதில் மக்கள் கவனம் செலுத்தியுள்ள நிலையில் முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாவின் அவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


குறிப்பாக இருபதாம் திருத்தம் உள்ளிட்ட அனைத்து வாக்கெடுப்பிலும் முஸ்லிம் கட்சி தலைவர் அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தார்கள்.


இவ்வாறு கட்சியின் தீர்மானத்தை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்வில்லை.


இந்த வரவு செலவு திட்டத்துக்கு எதிராக சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட கருத்து தெரிவிக்கின்றனர். நான் நாடாளுமன்றத்தில் கூறியது போன்று இந்த வரவு செலவு திட்டம்கூட கிழவியை மணப்பெண்ணாக்கும் கதை போன்றுள்ளது என நான் தெரிவித்திருந்தேன்.


இவ்வாறான வரவு செலவுத் திட்டத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு வாக்களிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பிலும் தலைவருக்கு எதிராகவும் உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களிப்பின், உறுப்பினர்களுக்கு எதிராக கட்சித் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாவிட்டால் தலைவர்கள் தமது இயலாமையை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லை எனில் இதுவும் மக்களை மடையர்களாக மாற்றும் ஒரு செயற்பாடே என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:

Post a Comment