என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள் !

 பொலிஸ் பணி கிடைக்காததால் கருணை கொலை செய்து விடுங்கள்' என, தேனி மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கை ஒருவர் மனு அளித்துள்ளார்.


தேனி பாரஸ்ட் ரோட்டைச் சேர்ந்தவர் 29 வயதான ஆராதனா, திருநங்கையான இவர் நீதிமன்ற உத்தரவு பெற்று, 2018ல் இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். இவரை அடுத்தகட்ட தேர்வுகளுக்கு அழைக்கவில்லை.


சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்த ஆண்டுக்கான பொலிஸ் தேர்வில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்னும் பணி கிடைக்கவில்லை.


இந்நிலையில், ஆராதனா நேற்று மாவட்ட ஆட்சியர் முரளீதரன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், 'பொலிஸ் பணி பெறுவதற்காக, நான்கு ஆண்டுகளாக முதல்வர் முதல் உயர் அதிகாரிகள் வரை மனு அளித்தேன்.


எனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். 'எனக்கு பொலிஸ் பணி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள்' என கூறியுள்ளார்.


ஆராதனா கூறுகையில், ''நான் பாட்டி வீட்டில் வசிக்கிறேன். ஊர்க்காவல் படையில் பணியாற்றுகிறேன். மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டும் பணி இருக்கும். ''இதனால், ஆயத்த ஆடை பேக்கிங் பணியும் செய்கிறேன். முதல்வர், அதிகாரிகள் எனக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.
Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News