தென்மராட்சி - மட்டுவில் பகுதியில் தனது பச்சிளம் சிசுவை உயிருடன் புதைக்க முயன்ற 18 வயதான பெண் உள்ளிட்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் இளம் பெண்ணுக்குப் பிறந்ததாகக் கருதப்படும் பச்சிளம் சிசுவை, அவர் தனது தாயுடன் இணைந்து உயிருடன் புதைக்க முற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி திருமணத்தின் முன்னரே குழந்தை பிரசவித்ததால், அதனைப் புதைக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு புதைக்க முற்படுகையில் சிசுவின் அழுகை சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு வருகைதந்த அயலவர்களால் சிசு காப்பாற்றப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை பொலிஸார் அங்கு சென்ற போது, குழந்தையைப் புதைக்கக் கிடங்கு வெட்டப்பட்டு இருந்ததுடன், அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
காப்பாற்றப்பட்ட சிசு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.